Friday, April 15, 2005
நினைத்தால் இங்கே யாரும் சண்டியர் ஆகலாம்!!!
Source : From Aanantha Vikatan...
சலவைக்குப் போட்டு வாங்கி, உதறி உடுத்தியது போல வெள்ளையாய் வழியும் தலை முடியும், மீசையும் அனுபவத்தின் அடையாளம்!
உலகத்தின் எந்தப் பரபரப்பும் பாதிக்காமல் ஓர் ஓலைக் குடிசையில், ஏகாந்தமான மன நிலையில் இருக்கிறார் ஜெயகாந்தன். ஞான பீடம விருது பெற்ற மகிழ்ச்சி தெரிகிறது. அதே நேரம், விருது குறித்த பெருமை இல்லாமல், அது ஒரு நிகழ்வு! என்கிறார் அழுத்தமாக.
விருது பெறுவது பற்றிய பெருமையைவிட, அதனால் ஏற்பட்ட பலன்தான் முக்கியம். தனிப்பட்ட முறையிலும், தமிழன் என்கிற அடிப்படையிலும் இதற்கு முன் இப்படி ஒரு பெரும் பலனை நான் அடைந்ததில்லை. இதன் பொருட்டும் இந்திவாலாக்களுக்கு நன்றி சொல்வோம். தமிழனுக்கு நன்றி உணர்ச்சி உண்டுதானே? என்கிறார் அழுத்தமாக.
தாய்மொழி வழிக் கல்வி பற்றி உங்கள் கருத்து என்ன?
தாய்மொழி என்பது பயிலப்பட வேண்டிய ஒன்றல்ல... அது இயல்பாக பாண்டித்யம் பெற வேண்டிய ஒன்று. நான் ஒரு தமிழ்ப் புலவன்! ஆனால், உங்கள் வாத்தியார்களிடமோ, உங்கள் பள்ளிக்கூடங்களிலோ நான் படிக்கவில்லை. அறிவாளி யாவதோ... முட்டாளாவதோ அவரவர் விருப்பம்!
நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டுப்படுத்தக் கூடாது. நான் பத்து குழந்தைகள் பெற்றுக்கொண்டு பிச்சைக்காரனாவேன், அதில் எனக்குச் சந்தோஷம் உண்டு என்று ஒருவர் சொன்னால், அது அவர் சுதந்திரம். அதே நேரத்தில் தாய்மொழி தமிழே தெரியாமல் வளர்கிற பிள்ளைகள், தமிழ்நாட்டில் வாழ்பவர்களாக இருக்க முடியாது. தமிழ் தெரியாமல் போனால் நஷ்டம் அவர்களுக்குத் தான்... தமிழுக்கு அல்ல!
வேர்கள் இருப்பதுதான் எல்லா வற்றையும் விட முக்கியம். தமிழர் காள்! விஞ்ஞானப் பார்வை பெறுங் கள். தமிழின்
பேராலும், தமிழின் மூலமாகவும் உம்மைச் சூழ்ந்த அஞ்ஞான இருள் விலகட்டும்!
தனித் தமிழில் மட்டுமே பேசுவது, செயல்படுவது என்பது இப்போதைய சூழலில் எந்த அளவுக்குச் சாத்தியம்?ஒ
நடைமுறைக்குச் சாத்தியமானது மட்டும் நடக்கும். அதில் விவாதம் இருக்கலாம். கலவரம், வன்முறை, பிறர் உரிமையில் தலையிடல், மிரட்டல் ஆகியவை கூடாது. அது ஜனநாயகத்துக்கு விரோதமானது!
தமிழன் இருக்கிற வரையில் தமிழ் பாதகமில்லாமல் இருக்கும். சிலருக்குக் கவலை, தாங்கள் இல்லாமல் போய் விடுவோமே என்பதுதான். அந்தக் கவலையும் எனக்கில்லை. அதனால் நான் அதைப் பற்றியெல்லாம் சிந்திப்ப தில்லை!
தமிழ்ப் பாதுகாப்புக்காக ஒரு இயக்கம் தொடங்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று போராட ஆரம்பித்திருக்கிறார்களே...
திருவாளர் ராமதாஸ் போன்றவர் களுக்குப் பிடித்திருப்பது பற்றல்ல... அது அரசியல்! எதையும் யார் மீதும் திணிக்கக்கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். அது தமிழாக இருந்தாலும்..!
எப்படிப் பெயர் வைப்பது என்பதெல் லாம் அவரவர் விருப்பம். நீங்கள் உங்கள் கருத்தைப் பிரசாரம் செய்யுங்கள். ஆனால் யார் மீதும் உங்கள் கருத்தைத் திணிக்காதீர் கள். மிரட்டாதீர்கள். அது காட்டு மிராண்டித்தனம்!
நினைத்தால் இங்கே யாரும் எப்போதும் சண்டியர் ஆகலாம். சான்றோர்கள் நினைக்காமல் இருக்கிறார்கள். அவ்வளவுதான்!
திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள்தான் இன்று ஓரளவாவது தமிழைக் காப்பாற்றி வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
முதலில் திராவிட இயக்கம் என்றால் எது? அவர்களின் கொள்கைகள் என்ன? சொன்னவற்றில் இதுவரை எதையெல்லாம் அவர்கள் கடைப் பிடித்திருக்கிறார்கள்? திராவிட இயக்கத்தவர்கள் தமிழை வைத்து தற்கொலை செய்துகொண்ட வர்கள். ஐயோ பாவம்! என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
திராவிட இயக்கங்களால் நன்மையே விளையவில்லையா?
தி.மு.க. பதவி ஏற்றதிலிருந்து தமிழகத்தின் ஒழுக்கமும், நற்பெயரும் சீரழிந்துபோனது என்பதுதான் நிதர்சனம். வளர்ச்சி இவர்கள் இல்லா விட்டாலும் ஏற்படும். நாம் வளர்கிற நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரசியலுக்கும், ஆட்சியதிகாரத்துக்கும் லாயக்கற்றவர்கள் என்பது தமிழர்தம் அனுபவம்!
இதை அப்போதே, தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள என்று காமராஜர் எல்லாருக்கும் போதித்தார். யாரும் கேட்கவில்லை. மட்டைகள் என்றால் அந்தக் கட்சிகள். குட்டை என்றால் என்ன? ஊழல் குட்டை!
திராவிடர் கழகம் போல இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் அரசிய லில் இருந்து இனியாவது விலகி இருந்தால், தமிழகத்தின் எஞ்சிய மானமாவது மிஞ்சும்!
நீங்கள் ஆதரித்துப் பேசும் காங்கிரஸ் கட்சியே, திராவிட இயக்கத்துடன்தான் கூட்டணி வைத்திருக்கிறது?
இல்லையில்லை! தி.மு.க|தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக் கிறது. அ.தி.மு.க-வைத் தவிர, தி.மு.க. கூட்டணி வைக்காத கட்சி இங்கே வேறு என்ன இருக்கிறது?
பெரியார், அண்ணா, கலைஞர் என திராவிடப் பாரம்பரியத்தையே நீங்கள் அடியோடு மறுக்கிறீர்களா?
அந்த வரிசை, எப்படி படிப்படி யாகக் கீழே இறங்கி வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது தெரியவில்லையா?
தமிழகத்தின் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
அந்த ஆட்சி நடந்து முடியட்டும்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி...
ஏன் வம்பு?
பயமா?
பயம் அல்ல... பெண் என்பதால் ஒரு மரியாதை!
தி.மு.க\வை விமர்சிக்கிற அளவு அ.தி.மு.க\வை விமர்சிக்கத் தயங்குவது ஏன்?
என் எழுத்துக்களை, கட்டுரைகளை, விமர்சனங்களை முழுமையாகப் படித்துப் பாருங்கள். இந்தக் கேள்வியே வராது.
முன்னுதாரணமாகத் திகழும்படியான தலைவர்களுக்குத் தமிழகத்தில் பஞ்சமா?
யாரும் பின்பற்றத் தயாராக இல்லாததால் அப்படியாகிறது. ஏன் யாரும் பின்பற்றவில்லை என்று கேட்பீர்களானால், தலைமை யின் லட்சணம் அப்படி இருக்கிறது.
ஆன்மிகம் தனது ஒழுக்கத்தையும், கௌரவத்தை யும் காத்து வருகிறதா?
ஆன்மா இல்லாததற்குப் பெயர் சவம்! ஆன்மிக வாதிகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சரி... தவறு பற்றி அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்!
உங்கள் அளவுகோல்படி எது சரி... எது தவறு?
அது அவனவன் புத்தி!
ஒரு படைப்பாளியாக நீங்கள் கண்ட கனவெல்லாம் நிறைவேறிவிட்டனவா?
படைப்பாளி கனவு கண்டுகொண்டு இருப்ப தில்லை. அவனே கனவுகளைப் படைத்துவிடுகிறான். நான் கண்ட கனவுகள்தான் என் எழுத்துக்கள்!
அறிவாளிகளைத் தமிழகம் சரியாகப் போற்ற வில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
அறிவு வரும்போது போற்றும். அதற்கு வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது?
சங்கர மடம் தொடர்பாக நீங்கள் எழுதி இருக்கும் "ஹர ஹர சங்கர" நாவல், உங்களின் பிரியமான வாசகர்களிடமேகூட அதிருப்தியை உண்டுபண்ணி இருக்கிறதே?
எழுதுவது மட்டும்தான் என் வேலை!
சமீபத்தில் கலவை சென்று ஜெயேந்திரரை சந்தித்தீர்களே... என்ன பேசினீர்கள்?
ஆம், அவர் எனக்குக் கௌரவம் செய்தார். ஆசீர்வதித்தார்! என்ன பேசினோம் என்பதை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம்இல்லை!
இத்தனை வருட வாழ்வில் தாங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?
இழப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. அதனால் பெற்றதுதான் எல்லாம்!
Labels:
பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான பதிவு.பத்திரிக்கைகளில் வரும் இது போன்ற வித்தியாசமான
பேட்டிகள் மற்றும் செய்திகளை
தொடர்ந்து தாருங்கள்.
அன்புடன்,
துபாய் ராஜா.
நன்றி துபாய் ராசா.
Post a Comment