Friday, September 23, 2005
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...???
குமுதம் தீராநதி-யில் படித்தது...
சலீமா என்று ஒரு இளம் பெண்; அழகிய முகம். பேசும்போது உதடுகள் புன்னகையில் விரித்தபடி இருக்கும். "வாங்கக்கா" என்று வீட்டிற்குள் அழைத்தாள். சுன்னம் காணாத வீடு காலியாக இருந்தது. பாத்திரம் பண்டம் என்று ஒரு சாமான் இல்லை.வெறுமையாக இருந்த அந்த ஒரு அறை வீட்டில், இரண்டு பெண்கள் மண் தரையில் அமர்ந்து இருப்பது ஒரு ஸர்ரியலிஸ சித்திரம்போல் இருந்தது. சுவர் ஓரமாக அவளுடைய தாய் மடியில் முறத்தில் இருந்த பீடிகளை நிதானமாகச் சுற்றிக்கொண்டிருந்தாள். நான் பிரமிப்புடன் அந்தச் சூழலை உள்வாங்கிக் கொள்கையில் சலீமாவின் கண்களில் நீர் நிறைந்திருந்தது. ஆனால் விசித்திரமாக உதடுகள் புன்னகைத்துக் கொண்டிருந்தன.
சலீமா கண்களில் தேங்கிய நீருடனேயே சிரித்துக் கொண்டு தன் கதையைச் சொன்னாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதாகும்போது தந்தை இறந்துவிட்டார். அவளுக்குப் படிக்க ஆசை. ஆனால் 5_ம் வகுப்புடன் படிப்பு நின்றது, தந்தை இறந்ததால். அவளும் அவளது தாயும் பீடித் தொழில் செய்து பிழைக்க வேண்டியதாயிற்று. மழைக்காலங்களில் தொழில் இருக்காது. அப்போதெல்லாம் அநேகமாகப் பட்டினி கிடப்பார்கள். அல்லது கடன் வாங்கி சமாளிப்பார்கள். இருவருக்கும் உடம்பு நன்றாக இருக்கும் நாட்களில் தினத்துக்கு 10 ரூபாய் சம்பாதிக்கலாம். அம்மாவுக்கு வரவர முடியாததால் அநேக நாட்கள் ஒரு வேளைச் சோற்றுக்கே இப்போது திண்டாட்டம்.
"அம்மாவுக்கு என்ன உடம்பு?" என்றேன்.
"புற்று நோய்க்கா" என்றாள்.
"ஏம்மா ஆஸ்பத்திரிக்குப் போகல்லியா?"
"அதுக்கெல்லாம் சௌகரியப்படாதுக்கா!" என்றாள்.
"என்னம்மா இது, பின்ன நோய் எப்படி குணமாகும்?"
"ஆஸ்பத்திரி பக்கத்திலே இல்லேக்கா. பஸ்ஸு சார்ஜ் நாலு ரூபா ஆகும்." சலீமா கண்களில் நீருடன் உதட்டில் புன்னகையுடன் சொன்னாள். உன் மர மண்டைக்கு என்னுடைய யதார்த்த கஷ்டங்கள் புரியுமாஒ என்பது போல. என் மர மண்டைக்குப் புரியவில்லை.
"பஸ் சார்ஜ் செலவைப் பார்த்தா முடியுமா? பெரிய வியாதின்னா மருந்து சாப்பிட்டாத்தானே குணமாகும்? கவர்மென்டு ஆஸ்பத்திரிலே இலவசமா பார்க்க மாட்டாங்களா?"
"எதுவும் இலவசம் இல்லேக்கா. ஒவ்வொருத்தன் கையிலேயும் காசு வைக்கணும். சீட்டு எழுதறவனுக்கு, நம்பர் கொடுக்கறவனுக்கு. எக்ஸ் ரேக்கு அழச்சிட்டுப் போறவனுக்கு, கடைசியிலே டாக்டர் நாளைக்கு வாம்பாங்க. ஆஸ்பத்திரின்னா ஒரு நாளோடு முடியற விஷயமாக்கா? அம்மாவை நாதான் அழைச்சிட்டுப் போணும். இங்கே பீடி சுத்தினாதான் காசு. எத்தனை நாள் வேலை செய்யாம அலையறது? யாரு எங்களை நம்பிக் கடன் கொடுப்பா?"
சிரிப்பும் கண்ணீருமாய் பேசும் சலீமாவின் பேச்சைக்கேட்டு நெகிழ்ந்து போன நிலையில் நான் மெள்ளச் சொன்னேன். "வேற ஏதாவது வேலை கிடைக்காதா, உடம்பை வருத்தாத வேலை , கொஞ்சம் அதிக ஊதியம் கிடைக்கிறமாதிரி?"
இவ்வளவு நேரம் வாயே திறக்காமல் பீடி சுற்றிக்கொண்டிருந்த சலீமாவின் தாய் சரேலேன்று நிமிர்ந்து என்னைக் கேட்டாள்: "என்ன மாதிரி வேலை? யார் கொடுப்பாங்க அவளுக்கு? யாரைப்பத்தியும் யாருக்குக் கவலை?" அவளுடைய குரல் கோபத்தில் உயர்ந்தது. "காலையிலேர்ந்து ராத்திரி வரைக்கும் உழைக்கிறோம். எங்க வேலைக்குத் தகுந்த கூலி கிடைக்கிறதில்லே. கன்டிராக்டர் நினைச்சபடி குடுக்கறான். அவனை ஏதாச்சும் கேட்டா நாளைக்கு வேலை இல்லேம்பான். நீ இங்கே வந்து எதுக்குக் குந்தியிருக்கே? நீ வந்ததாலே எங்க வாழ்க்கைலே என்ன மாறுதல் வரப் போகுது?"
"அம்மா அம்மா" என்று சலீமா அவளை அடக்க முயல்கையில் நான் எழுந்தேன். சாட்டையடி பட்டது போல் இருந்தது. சலீமா புன்னகையுடன், "காபி குடிச்சிட்டுப் போங்கக்கா" என்றபோது உண்மையில் என் கண்களில் நீர் நிறைந்தது. அவளுடைய தாய் மீண்டும் பீடி சுருட்ட ஆரம்பித்திருந்தாள். கைகளின் வேகத்தில் ஆத்திரம் வெளிப்பட்டது. நான் சமாதானமாக சலீமாவின் தோளைத்தட்டிவிட்டு வெளியேறினேன்.
சலீமாவின் முகம் என்னுள் இன்னமும் துன்புறுத்தும் நினைவாக இருக்கிறது.
Friday, April 29, 2005
மதமாற்ற பிரசாரம்...
மதமாற்ற பிரசாரம்...
Source : தினமலர் - 25 மார்ச் 2005
சென்னை: சென்னை நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டு கார்கில் நகரில் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் மீனவ மக்களை சிலர் கட்டாய மதமாற்ற பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக விதவைகள், வேலையில்லாதவர்கள், கைவிடப்பட்டவர்களை குறிவைத்து தான் மதமாற்ற பணி "ஜரூராக' நடக்கிறது. சில கிறிஸ்தவ அமைப்புகளின் பெயர்களில் இந்த பிரசாரம் பல நாட்களாக தீவிரமாக நிடந்து வருகிறது. சென்னை காசிமேட்டில் அண்ணா நகர் குடிசைப் பகுதி, திடீர் நகர், பல்லவன் நகர், திருவொற்றியூர் கடற்கரையோரப் பகுதியில் மீனவர்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். சுனாமி பேரலையில் குடியிருந்த வீடுகளையும், உடைமைகளையும் இழந்து இவர்கள் நடுத்தெருவிற்கு வந்தனர். இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மத்திய, மாநல அரசுகள் செய்து வருகின்றன.
சுனாமியில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தவர்களுக்காக சாத்தாங்காடு கார்கில் நகரில் தற்காலிக குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் நிவாரண நிதியும், மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் சுனாமி பாதிப்புகளை மறந்து, மீண்டும் தங்கள் தொழிலை தொடங்குவதற்கு வசதியாக விசைப்படகுகளுக்குரிய இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டன. சாத்தாங்காட்டில் கார்கில் நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு குழுக்களாக அப்பகுதியில் முகாமிட்டு மதமாற்ற பிரசாரங்களை "ஜரூராக' நடத்தி வருகின்றனர். குறிப்பாக, விதவைகள், குழந்தைகளை பறிகொடுத்தவர்கள், வேலையில்லாமல் இருக்கும் வாலிபர்கள், சுனாமி பேரலையை கண்டு மிரண்ட குழந்தைகள் ஆகியோரை தேர்ந்தெடுத்து மதப் பிரசங்கம் செய்கின்றனர்.
வறுமையால் வாடுபவர்களிடம், "ஏசுவை நிம்பினால் அரிசி, துணிமணிகள் இவைகள் கிடைப்பதோடு, உங்கள் வாழ்வு நல்வழிப்படும். தினந்தோறும் ஜெபம் செய்யுங்கள், உபவாசம் இருங்கள். ஏசு உங்களை ஆசீர்வதிப்பார், இழந்தவற்றை மீண்டும் பெறலாம்,' என பிரசங்கம் செய்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் வீடுகளுக்கே சென்று "மெஸ்மரிசம்' செய்து அந்த குடும்ப உறுப்பினர்களை தங்கள் மதத்தில் சேரும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
தினமும் இந்த பிரசாரம் நடந்து வருகிறது. இதற்கு சில மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும், சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிக பணம், பரிசு பொருட்களுடன் குடிசைப்பகுதிகளை முற்றுகையிடுவதால் எதிர்ப்பவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் முன்அரசு தலையிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.
மதமாற்ற பிரசாரம்...
Labels:
மதம்
Thursday, April 28, 2005
போப் II-ம் ஜான் பால் - சுடப்பட்டது ஏன்?
Source : எங்கோ படித்தது...
பொதுவாய் போப்பாண்டவராக இத்தாலியர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் ஜான் பால்தான் இத்தாலியரல்லாத போப். அவர் பிறந்தது போலந்தில். ஆனால் சுடப்பட்டதற்கு இது காரணமல்ல. போப் ஜான் பாலின் இயற்பெயர் கரோல் வாஜ்டிலா. போலந்தில் அப்போது அடக்குமுறை மிக்க கம்யூனிச ஆட்சி. கோயில்கள் தடை செய்யப்பட்டன. வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. கடவுள், ஆலயம், வழிபாடுகள் எல்லாமே கம்யூனிச அரசாங்கத்துக்குத் தெரியாமல் ரகசியமாய் நடைபெற்று வந்தன. இந்த அடக்குமுறை அரசால் பொதுமக்களுக்கு ஏகமாய் துயரம். இந்தச் சூழலில்தான் போப் வளர்ந்தார். ரகசியமாய் வேதம் படித்தார். மத குருவானார். அப்போது உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கம்யூனிசம் ஆட்சி செய்து கொண்டிருந்தது. 1978_ல் போலந்துக்காரரான ஜான் பால் போப் தேர்ந்தெடுக்கப்பட்டதுமே பல கம்யூனிசத் தலைவர்களுக்கு கலக்கம். ரஷ்ய உளவுத் துறையான கே.ஜி.பி.யின் தலைமைப் பொறுப்பிலிருந்த யூரி ஆண்ட்ரபோவ் (பின்னாளில் ரஷ்ய அதிபரானவர்), நமக்கு இனி தொல்லைதான்ஒ என்று பொலிட்பீரோ உறுப்பினர்களிடம் சொன்னதாக ஒரு தகவல் உண்டு. போலந்தில் அடக்குமுறையை அனுபவித்து வளர்ந்த போப் அதற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று அவர்கள் கருதினார்கள். உண்மைதான். அவர் போப்பாக பதவியேற்ற மறுவருடமே போலந்து சென்றார். பல வருடங்களுக்குப் பிறகு போலந்து நாட்டுக்கு வருகை தரும் ஒரு போப் என்பதால் ஏகப்பட்ட கூட்டம்_கிட்டத்தட்ட பத்துலட்சம் பேர் என்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் கூறிய மூன்று வாக்கியங்கள் அந்நாட்டு கம்யூனிச அரசாங்கத்தையே கவிழ்த்தது.
"நீங்கள் ஆண்கள். உங்களுக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. குழந்தைகளைப்போல் தவழ்ந்து கொண்டிருக்காதீர்கள்". இந்த வாக்கியங்கள் அடக்கு முறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மக்களை உசுப்பிவிட்டது. போலந்தில் மக்கள் போராட்டம் வெடிக்க கம்யூனிச அரசு கவிழ்ந்தது. போலந்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும், சோவியத் யூனியனிலும் கம்யூனிசம் வீழத் துவங்கியது.
போப் ஜான்பால் அடிக்கடி சொன்னது, மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை வேண்டும் என்பதுதான். கடவுள் நம்பிக்கை இருந்தாலே உலகில் அன்பு பெருகும் என்பது அவர் எண்ணம். கம்யூனிச சித்தாந்தத்தில் இருக்கும் கடவுள் மறுப்புக் கொள்கையை அவர் விரும்பவில்லை. அதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்தப் பின்னணிதான் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தக் காரணம்.
1983 மே மாதம் 13ம் நாள், புனித பீட்டர் சதுக்கத்தில், போப் இரண்டாம் ஜான் பாலை சுட்ட மெஹம்மத் அலி அஃகா துப்பாக்கியுடன்.
தன்னை கொலை செய்ய வந்தவனுக்கு சிறையில் சந்தித்து பாவமன்னிப்பு வழங்கும் போப்.
போப் II-ம் ஜான் பால் - சுடப்பட்டது ஏன்?
Labels:
மதம்
Friday, April 15, 2005
நினைத்தால் இங்கே யாரும் சண்டியர் ஆகலாம்!!!
Source : From Aanantha Vikatan...
சலவைக்குப் போட்டு வாங்கி, உதறி உடுத்தியது போல வெள்ளையாய் வழியும் தலை முடியும், மீசையும் அனுபவத்தின் அடையாளம்!
உலகத்தின் எந்தப் பரபரப்பும் பாதிக்காமல் ஓர் ஓலைக் குடிசையில், ஏகாந்தமான மன நிலையில் இருக்கிறார் ஜெயகாந்தன். ஞான பீடம விருது பெற்ற மகிழ்ச்சி தெரிகிறது. அதே நேரம், விருது குறித்த பெருமை இல்லாமல், அது ஒரு நிகழ்வு! என்கிறார் அழுத்தமாக.
விருது பெறுவது பற்றிய பெருமையைவிட, அதனால் ஏற்பட்ட பலன்தான் முக்கியம். தனிப்பட்ட முறையிலும், தமிழன் என்கிற அடிப்படையிலும் இதற்கு முன் இப்படி ஒரு பெரும் பலனை நான் அடைந்ததில்லை. இதன் பொருட்டும் இந்திவாலாக்களுக்கு நன்றி சொல்வோம். தமிழனுக்கு நன்றி உணர்ச்சி உண்டுதானே? என்கிறார் அழுத்தமாக.
தாய்மொழி வழிக் கல்வி பற்றி உங்கள் கருத்து என்ன?
தாய்மொழி என்பது பயிலப்பட வேண்டிய ஒன்றல்ல... அது இயல்பாக பாண்டித்யம் பெற வேண்டிய ஒன்று. நான் ஒரு தமிழ்ப் புலவன்! ஆனால், உங்கள் வாத்தியார்களிடமோ, உங்கள் பள்ளிக்கூடங்களிலோ நான் படிக்கவில்லை. அறிவாளி யாவதோ... முட்டாளாவதோ அவரவர் விருப்பம்!
நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டுப்படுத்தக் கூடாது. நான் பத்து குழந்தைகள் பெற்றுக்கொண்டு பிச்சைக்காரனாவேன், அதில் எனக்குச் சந்தோஷம் உண்டு என்று ஒருவர் சொன்னால், அது அவர் சுதந்திரம். அதே நேரத்தில் தாய்மொழி தமிழே தெரியாமல் வளர்கிற பிள்ளைகள், தமிழ்நாட்டில் வாழ்பவர்களாக இருக்க முடியாது. தமிழ் தெரியாமல் போனால் நஷ்டம் அவர்களுக்குத் தான்... தமிழுக்கு அல்ல!
வேர்கள் இருப்பதுதான் எல்லா வற்றையும் விட முக்கியம். தமிழர் காள்! விஞ்ஞானப் பார்வை பெறுங் கள். தமிழின்
பேராலும், தமிழின் மூலமாகவும் உம்மைச் சூழ்ந்த அஞ்ஞான இருள் விலகட்டும்!
தனித் தமிழில் மட்டுமே பேசுவது, செயல்படுவது என்பது இப்போதைய சூழலில் எந்த அளவுக்குச் சாத்தியம்?ஒ
நடைமுறைக்குச் சாத்தியமானது மட்டும் நடக்கும். அதில் விவாதம் இருக்கலாம். கலவரம், வன்முறை, பிறர் உரிமையில் தலையிடல், மிரட்டல் ஆகியவை கூடாது. அது ஜனநாயகத்துக்கு விரோதமானது!
தமிழன் இருக்கிற வரையில் தமிழ் பாதகமில்லாமல் இருக்கும். சிலருக்குக் கவலை, தாங்கள் இல்லாமல் போய் விடுவோமே என்பதுதான். அந்தக் கவலையும் எனக்கில்லை. அதனால் நான் அதைப் பற்றியெல்லாம் சிந்திப்ப தில்லை!
தமிழ்ப் பாதுகாப்புக்காக ஒரு இயக்கம் தொடங்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று போராட ஆரம்பித்திருக்கிறார்களே...
திருவாளர் ராமதாஸ் போன்றவர் களுக்குப் பிடித்திருப்பது பற்றல்ல... அது அரசியல்! எதையும் யார் மீதும் திணிக்கக்கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். அது தமிழாக இருந்தாலும்..!
எப்படிப் பெயர் வைப்பது என்பதெல் லாம் அவரவர் விருப்பம். நீங்கள் உங்கள் கருத்தைப் பிரசாரம் செய்யுங்கள். ஆனால் யார் மீதும் உங்கள் கருத்தைத் திணிக்காதீர் கள். மிரட்டாதீர்கள். அது காட்டு மிராண்டித்தனம்!
நினைத்தால் இங்கே யாரும் எப்போதும் சண்டியர் ஆகலாம். சான்றோர்கள் நினைக்காமல் இருக்கிறார்கள். அவ்வளவுதான்!
திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள்தான் இன்று ஓரளவாவது தமிழைக் காப்பாற்றி வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
முதலில் திராவிட இயக்கம் என்றால் எது? அவர்களின் கொள்கைகள் என்ன? சொன்னவற்றில் இதுவரை எதையெல்லாம் அவர்கள் கடைப் பிடித்திருக்கிறார்கள்? திராவிட இயக்கத்தவர்கள் தமிழை வைத்து தற்கொலை செய்துகொண்ட வர்கள். ஐயோ பாவம்! என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
திராவிட இயக்கங்களால் நன்மையே விளையவில்லையா?
தி.மு.க. பதவி ஏற்றதிலிருந்து தமிழகத்தின் ஒழுக்கமும், நற்பெயரும் சீரழிந்துபோனது என்பதுதான் நிதர்சனம். வளர்ச்சி இவர்கள் இல்லா விட்டாலும் ஏற்படும். நாம் வளர்கிற நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரசியலுக்கும், ஆட்சியதிகாரத்துக்கும் லாயக்கற்றவர்கள் என்பது தமிழர்தம் அனுபவம்!
இதை அப்போதே, தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள என்று காமராஜர் எல்லாருக்கும் போதித்தார். யாரும் கேட்கவில்லை. மட்டைகள் என்றால் அந்தக் கட்சிகள். குட்டை என்றால் என்ன? ஊழல் குட்டை!
திராவிடர் கழகம் போல இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் அரசிய லில் இருந்து இனியாவது விலகி இருந்தால், தமிழகத்தின் எஞ்சிய மானமாவது மிஞ்சும்!
நீங்கள் ஆதரித்துப் பேசும் காங்கிரஸ் கட்சியே, திராவிட இயக்கத்துடன்தான் கூட்டணி வைத்திருக்கிறது?
இல்லையில்லை! தி.மு.க|தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக் கிறது. அ.தி.மு.க-வைத் தவிர, தி.மு.க. கூட்டணி வைக்காத கட்சி இங்கே வேறு என்ன இருக்கிறது?
பெரியார், அண்ணா, கலைஞர் என திராவிடப் பாரம்பரியத்தையே நீங்கள் அடியோடு மறுக்கிறீர்களா?
அந்த வரிசை, எப்படி படிப்படி யாகக் கீழே இறங்கி வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது தெரியவில்லையா?
தமிழகத்தின் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
அந்த ஆட்சி நடந்து முடியட்டும்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி...
ஏன் வம்பு?
பயமா?
பயம் அல்ல... பெண் என்பதால் ஒரு மரியாதை!
தி.மு.க\வை விமர்சிக்கிற அளவு அ.தி.மு.க\வை விமர்சிக்கத் தயங்குவது ஏன்?
என் எழுத்துக்களை, கட்டுரைகளை, விமர்சனங்களை முழுமையாகப் படித்துப் பாருங்கள். இந்தக் கேள்வியே வராது.
முன்னுதாரணமாகத் திகழும்படியான தலைவர்களுக்குத் தமிழகத்தில் பஞ்சமா?
யாரும் பின்பற்றத் தயாராக இல்லாததால் அப்படியாகிறது. ஏன் யாரும் பின்பற்றவில்லை என்று கேட்பீர்களானால், தலைமை யின் லட்சணம் அப்படி இருக்கிறது.
ஆன்மிகம் தனது ஒழுக்கத்தையும், கௌரவத்தை யும் காத்து வருகிறதா?
ஆன்மா இல்லாததற்குப் பெயர் சவம்! ஆன்மிக வாதிகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சரி... தவறு பற்றி அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்!
உங்கள் அளவுகோல்படி எது சரி... எது தவறு?
அது அவனவன் புத்தி!
ஒரு படைப்பாளியாக நீங்கள் கண்ட கனவெல்லாம் நிறைவேறிவிட்டனவா?
படைப்பாளி கனவு கண்டுகொண்டு இருப்ப தில்லை. அவனே கனவுகளைப் படைத்துவிடுகிறான். நான் கண்ட கனவுகள்தான் என் எழுத்துக்கள்!
அறிவாளிகளைத் தமிழகம் சரியாகப் போற்ற வில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
அறிவு வரும்போது போற்றும். அதற்கு வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது?
சங்கர மடம் தொடர்பாக நீங்கள் எழுதி இருக்கும் "ஹர ஹர சங்கர" நாவல், உங்களின் பிரியமான வாசகர்களிடமேகூட அதிருப்தியை உண்டுபண்ணி இருக்கிறதே?
எழுதுவது மட்டும்தான் என் வேலை!
சமீபத்தில் கலவை சென்று ஜெயேந்திரரை சந்தித்தீர்களே... என்ன பேசினீர்கள்?
ஆம், அவர் எனக்குக் கௌரவம் செய்தார். ஆசீர்வதித்தார்! என்ன பேசினோம் என்பதை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம்இல்லை!
இத்தனை வருட வாழ்வில் தாங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?
இழப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. அதனால் பெற்றதுதான் எல்லாம்!
நினைத்தால் இங்கே யாரும் சண்டியர் ஆகலாம்!!!
Labels:
பேட்டி
Thursday, March 31, 2005
தபுசங்கர் பக்கங்'கள்'...
உன் குதிகாலை மையமாக வைத்து
ஒரு சுற்றுச் சுற்றி
கட்டை விரலால்
மண்ணில் நீ போடும் அழகு வட்டத்தில்...
குழந்தைகள் போனபிறகு
குடியிருப்பவன் நான்.
உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.
சின்ன வயதிலிருந்து என்னை
தொட்டுப் பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக்கொண்ட போதுதான்
தெரிந்துகொண்டேன்...
நீ என்னைக் கட்டிக்கொள்ள
ஆசைப்படுவதை!
நீ சுத்த ஏமாளி.
உன்னை அழகுபடுத்திக்கொள்ள
நீ விலை கொடுத்து வாங்கிய
எல்லாப் பொருட்களுமே
உன்னைக்கொண்டு
தங்களை
அழகுபடுத்திக்கொள்கின்றன!
'ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...
'நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'
உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே! என்று நான் சொன்னதுதான் தாமதம்... உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. 'ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்?'
என்றாய். 'பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம்.
அதற்குத்தான்!' என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, 'ஒரு நிமிஷம்... நான் துடிதுடிச்சுப் போயிட்டேன், தெரியுமா!' என்றாய்.
காதல் அப்படித்தான்... துடித்துக்கொண்டிருக்கிற இதயத்தைத் துடிதுடிக்க வைத்துவிடும்!
நமக்குக் கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் சொல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன்' என்றேன். 'ஏன்... என் முகத்திலா அருந்ததி இருக்கிறது?' என்றாய். 'இல்லை...
அருந்ததியே உன் முகமாக இருக்கிறது!' என்றேன். நீ சிரித்துவிட்டு, 'அப்ப நான் மட்டும் வானத்தைப் பார்க்கணுமா?' என்றாய்.
வேண்டாம்... வேண்டாம். சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள்' என்றேன்.
ம்ம்ம்... கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?' என்றாய். 'சிரிக்கட்டுமே... அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது!' என்றேன். 'சடங்கில் இப்படியெல்லாமா விளையாடுவது?' என்றாய்.
சடங்கே ஒரு விளையாட்டுத்தானே!' என்றேன்.
உன் பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.
'கடிகாரம் ஓடலியா?'என
யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்
அது காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்!
என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே! என்றேன்.
கலங்கிப் போனாய். எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா? என்றாய் உடைந்த குரலில்.
உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்னையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.
உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைக்காதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப்
பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல்.
'எனக்கு ஏதாவது பரிசு தந்தேயாகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன்.
'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய்.
'ஆமாம், உசத்திதான்! முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!'
சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.
உன் பிறந்த நாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டிருக்கின்றன...
பிறந்திருந்தால்
உன் பிறந்த நாளாய்
பிறந்திருக்க வேண்டும் என்று.
ஊரிலேயே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய்.
நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.
கோடை விடுமுறை வந்தால்
குளிர்ப் பிரதேசம் தேடி
ஓடுவதில்லை நான்.
ஆனால்
ஒவ்வொரு கோடை
விடுமுறையிலும்
என்னையே தேடி ஓடிவருகிறது
ஒரு குளிர்ப் பிரதேசம்.
அதற்குப் பெயர்
அத்தை மகள்
பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்ளைக் காட்டி
'இது எந்த ஊர் ஆப்பிள்?'
'அது எந்த ஊர் ஆப்பிள்?' என்று
கேட்டுக்கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்
கேட்டன
'நீ எந்த ஊர் ஆப்பிள்?'
உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்!
அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.
ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன்.
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா' என்றேன்.
'அய்யோ பாவம்!' என்றார் அப்பா.
'ஏம்ப்பா..?'
டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற
என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா & அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்...
இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே.
சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அபடி என்ன இம்சை பண்றேன் உங்களை?' என்று சண்டைபோட ஆரம்பித்தார்.
அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!
'போதும் பார்த்தது
கண் பட்டுவிடப் போகிறது' என்றாய்.
ச்சே... ச்சே... உன்னைப் பார்ப்பதால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது?
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.
கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்...
கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோ மா
நிலவை! என்று.
தொலைபேசியில்
நீ எனக்குத்தானே 'குட்நைட்' சொன்னாய்.
ஆனால் இந்த இரவோ
அதைத்தான் நீ 'நல்ல இரவு' என்று
சொல்லிவிட்டதாக நினைத்து
விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே.
தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வொரு முறையும்
உன் உடையைச் சரி செய்கிறாய்.
காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்.
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.
முதலாட்டம் பார்த்துவிட்டு
உன் வீட்டைக் கடக்கையில்,
முதல்முதலில் உன்னை
இரவு உடையில் பார்த்த
அந்த முதல் இரவை
இன்னும் விடியவிடவில்லை நான்!
வெள்ளி
முளைக்கும்போது
நீ குளிக்கிறாயா?
இல்லை...
நீ குளிக்கும்போது
வெள்ளி
முளைக்கிறதா?
நீ குளித்து முடித்ததும்
ஒரு துண்டெடுத்து
உன் கூந்தலில்
சுற்றிக்கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான்
முடிசூட்டிக் கொள்வதா?
கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்,
உன் மீது புகார் வாசிக்கின்றன...
'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்
ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.
என்னை
பைனாகுலர் பார்வை
பார்க்கின்றன
உன் மைனாகுலர் விழிகள்.
அடிக்கிற கைகள் எல்லாம்
அணைக்குமா என்பது தெரியாது.
ஆனால் நீ அடிப்பதே
அணைப்பது மாதிரிதான் இருக்கிறது.
உன்னை
எங்கெங்கெல்லாம் பார்க்கிறேனோ
அங்கெங்கெல்லாம்
நான் அப்படியே நிற்கிறேன்
இன்னும்.
என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக்கொண்டு
காமத்தை உதறிவிடுகிற
அதிசய அன்னம் நீ.
தபுசங்கர் பக்கங்'கள்'...
Labels:
கவிதை
Subscribe to:
Posts (Atom)