Friday, September 23, 2005
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...???
குமுதம் தீராநதி-யில் படித்தது...
சலீமா என்று ஒரு இளம் பெண்; அழகிய முகம். பேசும்போது உதடுகள் புன்னகையில் விரித்தபடி இருக்கும். "வாங்கக்கா" என்று வீட்டிற்குள் அழைத்தாள். சுன்னம் காணாத வீடு காலியாக இருந்தது. பாத்திரம் பண்டம் என்று ஒரு சாமான் இல்லை.வெறுமையாக இருந்த அந்த ஒரு அறை வீட்டில், இரண்டு பெண்கள் மண் தரையில் அமர்ந்து இருப்பது ஒரு ஸர்ரியலிஸ சித்திரம்போல் இருந்தது. சுவர் ஓரமாக அவளுடைய தாய் மடியில் முறத்தில் இருந்த பீடிகளை நிதானமாகச் சுற்றிக்கொண்டிருந்தாள். நான் பிரமிப்புடன் அந்தச் சூழலை உள்வாங்கிக் கொள்கையில் சலீமாவின் கண்களில் நீர் நிறைந்திருந்தது. ஆனால் விசித்திரமாக உதடுகள் புன்னகைத்துக் கொண்டிருந்தன.
சலீமா கண்களில் தேங்கிய நீருடனேயே சிரித்துக் கொண்டு தன் கதையைச் சொன்னாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதாகும்போது தந்தை இறந்துவிட்டார். அவளுக்குப் படிக்க ஆசை. ஆனால் 5_ம் வகுப்புடன் படிப்பு நின்றது, தந்தை இறந்ததால். அவளும் அவளது தாயும் பீடித் தொழில் செய்து பிழைக்க வேண்டியதாயிற்று. மழைக்காலங்களில் தொழில் இருக்காது. அப்போதெல்லாம் அநேகமாகப் பட்டினி கிடப்பார்கள். அல்லது கடன் வாங்கி சமாளிப்பார்கள். இருவருக்கும் உடம்பு நன்றாக இருக்கும் நாட்களில் தினத்துக்கு 10 ரூபாய் சம்பாதிக்கலாம். அம்மாவுக்கு வரவர முடியாததால் அநேக நாட்கள் ஒரு வேளைச் சோற்றுக்கே இப்போது திண்டாட்டம்.
"அம்மாவுக்கு என்ன உடம்பு?" என்றேன்.
"புற்று நோய்க்கா" என்றாள்.
"ஏம்மா ஆஸ்பத்திரிக்குப் போகல்லியா?"
"அதுக்கெல்லாம் சௌகரியப்படாதுக்கா!" என்றாள்.
"என்னம்மா இது, பின்ன நோய் எப்படி குணமாகும்?"
"ஆஸ்பத்திரி பக்கத்திலே இல்லேக்கா. பஸ்ஸு சார்ஜ் நாலு ரூபா ஆகும்." சலீமா கண்களில் நீருடன் உதட்டில் புன்னகையுடன் சொன்னாள். உன் மர மண்டைக்கு என்னுடைய யதார்த்த கஷ்டங்கள் புரியுமாஒ என்பது போல. என் மர மண்டைக்குப் புரியவில்லை.
"பஸ் சார்ஜ் செலவைப் பார்த்தா முடியுமா? பெரிய வியாதின்னா மருந்து சாப்பிட்டாத்தானே குணமாகும்? கவர்மென்டு ஆஸ்பத்திரிலே இலவசமா பார்க்க மாட்டாங்களா?"
"எதுவும் இலவசம் இல்லேக்கா. ஒவ்வொருத்தன் கையிலேயும் காசு வைக்கணும். சீட்டு எழுதறவனுக்கு, நம்பர் கொடுக்கறவனுக்கு. எக்ஸ் ரேக்கு அழச்சிட்டுப் போறவனுக்கு, கடைசியிலே டாக்டர் நாளைக்கு வாம்பாங்க. ஆஸ்பத்திரின்னா ஒரு நாளோடு முடியற விஷயமாக்கா? அம்மாவை நாதான் அழைச்சிட்டுப் போணும். இங்கே பீடி சுத்தினாதான் காசு. எத்தனை நாள் வேலை செய்யாம அலையறது? யாரு எங்களை நம்பிக் கடன் கொடுப்பா?"
சிரிப்பும் கண்ணீருமாய் பேசும் சலீமாவின் பேச்சைக்கேட்டு நெகிழ்ந்து போன நிலையில் நான் மெள்ளச் சொன்னேன். "வேற ஏதாவது வேலை கிடைக்காதா, உடம்பை வருத்தாத வேலை , கொஞ்சம் அதிக ஊதியம் கிடைக்கிறமாதிரி?"
இவ்வளவு நேரம் வாயே திறக்காமல் பீடி சுற்றிக்கொண்டிருந்த சலீமாவின் தாய் சரேலேன்று நிமிர்ந்து என்னைக் கேட்டாள்: "என்ன மாதிரி வேலை? யார் கொடுப்பாங்க அவளுக்கு? யாரைப்பத்தியும் யாருக்குக் கவலை?" அவளுடைய குரல் கோபத்தில் உயர்ந்தது. "காலையிலேர்ந்து ராத்திரி வரைக்கும் உழைக்கிறோம். எங்க வேலைக்குத் தகுந்த கூலி கிடைக்கிறதில்லே. கன்டிராக்டர் நினைச்சபடி குடுக்கறான். அவனை ஏதாச்சும் கேட்டா நாளைக்கு வேலை இல்லேம்பான். நீ இங்கே வந்து எதுக்குக் குந்தியிருக்கே? நீ வந்ததாலே எங்க வாழ்க்கைலே என்ன மாறுதல் வரப் போகுது?"
"அம்மா அம்மா" என்று சலீமா அவளை அடக்க முயல்கையில் நான் எழுந்தேன். சாட்டையடி பட்டது போல் இருந்தது. சலீமா புன்னகையுடன், "காபி குடிச்சிட்டுப் போங்கக்கா" என்றபோது உண்மையில் என் கண்களில் நீர் நிறைந்தது. அவளுடைய தாய் மீண்டும் பீடி சுருட்ட ஆரம்பித்திருந்தாள். கைகளின் வேகத்தில் ஆத்திரம் வெளிப்பட்டது. நான் சமாதானமாக சலீமாவின் தோளைத்தட்டிவிட்டு வெளியேறினேன்.
சலீமாவின் முகம் என்னுள் இன்னமும் துன்புறுத்தும் நினைவாக இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நானும் இந்த செய்தியை படிச்சேன் சீனு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நம்ம ஊரு பக்கம் நீங்க பார்த்து இருக்கிங்களான்னு தெரியலை நான் பார்த்து இருக்கிறேன் ரொம்ப பேர் இது மாதிரி பீடி சுற்றும் தொழிலில் இருக்காங்க. ரொம்ப கஷ்ட வாழ்க்கை அவங்களுக்கு.
Post a Comment