Thursday, March 31, 2005
தபுசங்கர் பக்கங்'கள்'...
உன் குதிகாலை மையமாக வைத்து
ஒரு சுற்றுச் சுற்றி
கட்டை விரலால்
மண்ணில் நீ போடும் அழகு வட்டத்தில்...
குழந்தைகள் போனபிறகு
குடியிருப்பவன் நான்.
உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.
சின்ன வயதிலிருந்து என்னை
தொட்டுப் பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக்கொண்ட போதுதான்
தெரிந்துகொண்டேன்...
நீ என்னைக் கட்டிக்கொள்ள
ஆசைப்படுவதை!
நீ சுத்த ஏமாளி.
உன்னை அழகுபடுத்திக்கொள்ள
நீ விலை கொடுத்து வாங்கிய
எல்லாப் பொருட்களுமே
உன்னைக்கொண்டு
தங்களை
அழகுபடுத்திக்கொள்கின்றன!
'ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...
'நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'
உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே! என்று நான் சொன்னதுதான் தாமதம்... உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. 'ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்?'
என்றாய். 'பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம்.
அதற்குத்தான்!' என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, 'ஒரு நிமிஷம்... நான் துடிதுடிச்சுப் போயிட்டேன், தெரியுமா!' என்றாய்.
காதல் அப்படித்தான்... துடித்துக்கொண்டிருக்கிற இதயத்தைத் துடிதுடிக்க வைத்துவிடும்!
நமக்குக் கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் சொல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன்' என்றேன். 'ஏன்... என் முகத்திலா அருந்ததி இருக்கிறது?' என்றாய். 'இல்லை...
அருந்ததியே உன் முகமாக இருக்கிறது!' என்றேன். நீ சிரித்துவிட்டு, 'அப்ப நான் மட்டும் வானத்தைப் பார்க்கணுமா?' என்றாய்.
வேண்டாம்... வேண்டாம். சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள்' என்றேன்.
ம்ம்ம்... கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?' என்றாய். 'சிரிக்கட்டுமே... அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது!' என்றேன். 'சடங்கில் இப்படியெல்லாமா விளையாடுவது?' என்றாய்.
சடங்கே ஒரு விளையாட்டுத்தானே!' என்றேன்.
உன் பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.
'கடிகாரம் ஓடலியா?'என
யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்
அது காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்!
என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே! என்றேன்.
கலங்கிப் போனாய். எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா? என்றாய் உடைந்த குரலில்.
உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்னையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.
உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைக்காதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப்
பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல்.
'எனக்கு ஏதாவது பரிசு தந்தேயாகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன்.
'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய்.
'ஆமாம், உசத்திதான்! முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!'
சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.
உன் பிறந்த நாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டிருக்கின்றன...
பிறந்திருந்தால்
உன் பிறந்த நாளாய்
பிறந்திருக்க வேண்டும் என்று.
ஊரிலேயே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய்.
நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.
கோடை விடுமுறை வந்தால்
குளிர்ப் பிரதேசம் தேடி
ஓடுவதில்லை நான்.
ஆனால்
ஒவ்வொரு கோடை
விடுமுறையிலும்
என்னையே தேடி ஓடிவருகிறது
ஒரு குளிர்ப் பிரதேசம்.
அதற்குப் பெயர்
அத்தை மகள்
பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்ளைக் காட்டி
'இது எந்த ஊர் ஆப்பிள்?'
'அது எந்த ஊர் ஆப்பிள்?' என்று
கேட்டுக்கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்
கேட்டன
'நீ எந்த ஊர் ஆப்பிள்?'
உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்!
அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.
ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன்.
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா' என்றேன்.
'அய்யோ பாவம்!' என்றார் அப்பா.
'ஏம்ப்பா..?'
டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற
என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா & அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்...
இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே.
சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அபடி என்ன இம்சை பண்றேன் உங்களை?' என்று சண்டைபோட ஆரம்பித்தார்.
அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!
'போதும் பார்த்தது
கண் பட்டுவிடப் போகிறது' என்றாய்.
ச்சே... ச்சே... உன்னைப் பார்ப்பதால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது?
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.
கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்...
கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோ மா
நிலவை! என்று.
தொலைபேசியில்
நீ எனக்குத்தானே 'குட்நைட்' சொன்னாய்.
ஆனால் இந்த இரவோ
அதைத்தான் நீ 'நல்ல இரவு' என்று
சொல்லிவிட்டதாக நினைத்து
விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே.
தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வொரு முறையும்
உன் உடையைச் சரி செய்கிறாய்.
காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்.
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.
முதலாட்டம் பார்த்துவிட்டு
உன் வீட்டைக் கடக்கையில்,
முதல்முதலில் உன்னை
இரவு உடையில் பார்த்த
அந்த முதல் இரவை
இன்னும் விடியவிடவில்லை நான்!
வெள்ளி
முளைக்கும்போது
நீ குளிக்கிறாயா?
இல்லை...
நீ குளிக்கும்போது
வெள்ளி
முளைக்கிறதா?
நீ குளித்து முடித்ததும்
ஒரு துண்டெடுத்து
உன் கூந்தலில்
சுற்றிக்கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான்
முடிசூட்டிக் கொள்வதா?
கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்,
உன் மீது புகார் வாசிக்கின்றன...
'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்
ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.
என்னை
பைனாகுலர் பார்வை
பார்க்கின்றன
உன் மைனாகுலர் விழிகள்.
அடிக்கிற கைகள் எல்லாம்
அணைக்குமா என்பது தெரியாது.
ஆனால் நீ அடிப்பதே
அணைப்பது மாதிரிதான் இருக்கிறது.
உன்னை
எங்கெங்கெல்லாம் பார்க்கிறேனோ
அங்கெங்கெல்லாம்
நான் அப்படியே நிற்கிறேன்
இன்னும்.
என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக்கொண்டு
காமத்தை உதறிவிடுகிற
அதிசய அன்னம் நீ.
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
சூப்பர்
Post a Comment