Friday, October 15, 2004
நான் ரசித்த கவிதைகள் 2
Source : எங்கேயோ படித்தது...
அதிசயமாய்
இருக்கிறது
இத்தனை இனிய காதலர்களின்
காலடிச் சுவடுகளை
உள்ளிழுத்தும்
கடல் இன்னும்
உப்பு கரித்துக் கொண்டிருக்கிறது!
இரட்டை இனிமை
சில சமயம்
இரட்டை இம்சை!
காதலி சிணுங்கலும்
அவளது
கைப்பேசி அழைப்பின்
சிணுங்கலும்!
- கு.வைரச்சந்திரன்
நாம் சந்தித்துக்கொள்வதுண்டு.
ஆனால்,
நாம் பேசிக்கொண்டதில்லை.
என்னருகில் உள்ளவருடன்
நீயும்
உன்னருகில் உள்ளவருடன்
நானும்
பேசிக்கொள்வதுண்டு.
இதற்காக நாம்
வருத்தப்படுவதாகக்கூட
எனக்குத் தோன்றவில்லை.
பேசத் தயங்கிப்
பரிமாறிக்கொள்ளும்
புன்னகைகளும்
மௌனங்கள் தரும்
கனமான அர்த்தங்களும்
பேசுவதில்
நிறைவடைந்துவிடுமா என்ன?
- ஹம்ஸா
அவசியமில்லை...
நீரூற்றுபவனைப் பற்றித்
தெரிந்திருக்க...
பூக்களுக்கும்
பூக்களைப் போலவே
காதலுக்கும்!
எப்படி
அர்த்தப்படுத்திக் கொள்ளட்டும்...
என்முன்னே
கிழித்தெறிந்த கடிதத்தை
எனக்குத் தெரியாதபடி,
நீ
சேகரித்துச் சென்றதை?
- ஒப்பிலான்
இனி காத்திருக்கப் போவதில்லை!
மணி ஒன்று பதினைந்துக்கு
வரும் பேருந்துக்காக
பன்னிரண்டு மணிக்கே - வந்து
போகின்ற பேருந்தெல்லாம்
எட்டிப் பார்க்கும்போது
ஏற்படும் ஏளனப் பார்வைகள்
ஏராளம் - ஆனாலும்
ஏதும் அறியாமல் - நீ
பேருந்தில் நகர்கையில்தான்
நினைப்பேன்...
இனி காத்திருக்கப் போவதில்லை - என்று
தினம் - தினமும்!
- கு.கனிராஜ்
தபூசங்கர்
நீ
உன் தோழிகளோடு
கைப் பந்து
ஆடுவதுதான்
எனக்குத்
திருவிளையாடல்.
அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய்.
அன்று
நீ குடை
விரித்ததற்காகக்
கோபித்துக் கொண்டு
நின்றுவிட்ட
மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால்
நீ எங்கோ குடை
விரிப்பதாகவே
நினைத்துக்
கொள்கிறேன்.
அன்னை்
குற்ற நெஞ்சு குறுகுறுக்கும் - அதில்
குறைகள் பல உண்டு - எனைப்
பெற்றவள் செய்த சமையல் தான் அதில்
பிழைகள் கண்டதுண்டு - ருசி
அற்றுப்போன அமெரிக்க வாழ்வில்
பற்றே இல்லையடி - ஒரு
வற்றக்குழம்பு அதுபோதும் - அன்னைக்
கைமணம் அதில் வேணும்
- ரவி அன்பில்
பழநிபாரதி கவிதைகள்
வரவேற்பறை
கதவு திறந்ததும்
காற்றின் விரல்பட்டுச்
சிணுங்குகிறது
தொங்கும் அழைப்புமணி
பணமூட்டைகளைச்
சுமக்கும் குபேரன்...
பக்கத்திலேயே
கை தூக்கி நிற்கிறார்
சிரிக்கும் புத்தர்
கண்ணாடித் தொட்டியில்
தங்க மீன்களின்
விளையாடல்
வீட்டைச் சுற்றி
ஒரே கூட்டம்...
ஏலம் விட்டது
நீதிமன்றம்.
பூஜையறை
பிளாஸ்டிக் மாவிலைத்
தோரணங்கள்.
ஸ்டிக்கர் கோலங்கள்.
டப்பர் வேர் டப்பாவிலிருந்து
ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்.
கடவுள் ஏன் கல்லானான்?
கேட்டான் கண்ணதாசன்...
கடவுள் ஏன் பிளாஸ்டிக்கானான்?
பார்த்துக் கொண்டிருக்கிறான் பழநிபாரதி.
குளியலறை
கைம்பெண் ஒருத்தியின்
குளியலறையில்
சுவரில் உள்ளது
ஸ்டிக்கர் பொட்டு.
சமையலறை
தீ
சமைக்கிறதா
எரிக்கிறதா?
தெரியாமலேயே
தாளிக்கிறாள் அவள்
காற்றில் கலந்து வெளியேறுகிறது
அவளது
பெருங்காய வாசம்.
படுக்கையறை
நீல வெளிச்சத்தில்
விலக்கப்பட்ட முள்தேடி
ஓயாமல் சுழல்கிறது
இசைத்தட்டு
திராட்சை பறிக்கும் பெண்ணின்
ஓவியத்திற்குக் கீழே
வெறுமையாக உள்ளது
பழக்கூடை.
பூனைகளுக்குக்
குழந்தைகளின் குரலைக் கொடுத்து
எதையெதையோ
கேட்க வைக்கிறது
இந்த இரவு.
வீடு
ஓரங்கிழிந்த பாய்
காரை பெயர்ந்த சுவர்
ஒட்டடை படிந்த ஜன்னல்
ஓசையெழுப்பும் மின்விசிறி
கலைந்த தலையணை
கழுவாத பாத்திரம்
என்றாலும் என்வீடு இனிது
எனில், எதிர்வீடு உனது
விருப்பம் போல் ஆணியடிக்க
விருந்தினரை உபசரிக்க
விடிய விடிய விளக்கெரிக்க
முடியாத வாடகை வீட்டில்
வசிக்கலாம், வாழமுடியாது
நகைவிற்று நிலம்விற்று
நடுநடுவே கடன்பெற்று
போய்ச்சேரும் புதுவீடு
புரிய வைக்கும்
நிம்மதியிழக்க எளியவழி
வீடு கட்டுவது
அண்ணாந்து வியக்க
அம்மா வீடு
மல்லாந்து கிடக்க
மாமியார் வீடு
நல்லவீடு ரெண்டிருந்தும்
சின்ன வீட்டுக்கேங்கி
செத்துத் தொலைவான்
இலங்கேஸ்வரன்
கூட்டிப் பெருக்ககொண்டாடிச் சிரிக்க
நீட்டிப் படுக்க
நிம்மதி சுகிக்க
கேட்கும் பக்தனுக்கு
இல்லை ஒரு வீடு
அப்பன் முருகனுக்கோ
ஆறு படைவீடு
கொளுத்திய பத்தி வாடை
கூடிவைத்த ஒப்பாரி
சிரிக்காத மாலைகள்
உறவு பிணக்குயென
கலவரப்படும் துக்க வீட்டில்
யாரிடம் வசூலிப்பது
கொடுத்த கடனை?
வீட்டுக்கு வீடு
இருக்கிறது வாசல்
எந்த வீடாயினும்சோறு கிடைக்கிறது
கலியமூர்த்திக்கு
பின் வாசலில்.
பியானோவில் விழுந்த பூனை
இசையெழுப்புதைப் போல
காதல் எல்லோரையும்
கவிஞனாக்கி விடுகிறது.ஒஒ
யாரோ... அவன் யாரோ..?
அடிக்கடி வருது
அந்தக் கனவு.
கொட்டும் மழை...
ஒற்றைக் குடை...
உள்ளே நானும் அவனும்.
அவன் முகம் மட்டும்
தெரிவதில்லை.
ஏனோ... அது ஏனோ..?
ராஜகுமாரன்..?
கொஞ்சம் பந்தா
நிறைய பணிவு...
கொஞ்சம் சில்மிஷம்
நிறைய சின்சியர்...
கொஞ்சம் கேர்லெஸ்
நிறைய பொஸஸிவ்னெஸ்...
எங்கேடா இருக்கே
என் செல்லம்..?ஒஒ
காதல்ங்கிறது?
இதயத்துல ஹைட்ரஜன் பாம்
அடிவயித்துல சல்ஃப்யூரிக் ஆசிட்
மூச்சுல லோ&ஆக்ஸிஜன்
கிறங்கடிக்கிற கெமிஸ்ட்ரிபா!
ஊ லலல்லா
உள்ளம் கேட்குமே மோர்!ஒஒ
காதலர்களுக்கு..?
சில காலம் சேர்ந்து
சில காலம் பிரிந்து
ஆயுசுக்கும் சொல்லிட்டேயிருங்க
ஐ லவ் யூ..!ஒஒ
அப்ளிகேஷன்ஸ்..?
இவ்ளோ.... வந்திருக்கு!
எல்லாவற்றிற்கும்
நோஒ சொன்ன
இடியட் பியூட்டி நான்.ஒஒ
காதல்
என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது
நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.
நான்
உன்னைக் காதலிக்கிறேன்.
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது
என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.
அடி, என்னை மறந்தவளே..!
செட்டியார் வீடு கட்ட
கொட்டிப் போட்ட
மண்ணுல
கோபுர வீடுகட்டி
கொஞ்சி விளையாண்டது
நினைவிருக்கா?
தெருவோரம் நின்ன மரம்
என் திண்ணையோரம்
நட்ட மரம் (மின்கம்பம்)
எப்படித்தான் எரியுதுன்னு
என்னைக் கேட்டியே,
நினைவிருக்கா?
வட்டிலில சோறுபோட்டு
வானத்து நிலா பார்த்து
ஒண்ணா உட்கார்ந்து
உருட்டித் தின்னமே
உனக்கது நினைவிருக்கா?
பள்ளிக்கூடம் போகயில
பாவி மழ பெய்யயில
ஓடிப் போய் மரத்தடியில்
ஒண்டியது
நினைவிருக்கா?
வீடு திரும்பயில
விட்ட மழ தொடரயில
உன் சந்தன முகத்துல
சாரல் படக்கூடாதுன்னு
என் சட்டையக் கழட்டித்
தந்தேனே நினைவிருக்கா?
விளையாட நீ வரல,
வீதியில காணவில்லே
உன் வீடுதேடி நான்
வந்தேன்
அந்த நாள்
நினைவிருக்கா?
பச்ச ஒலையில
பத்திரமா நீயிருந்த
பதினாறு வயசு வியாதி
பத்திக்கிச்சு நமக்குள்ள
பட்டப் படிப்பு படிச்சு வர
உன்னை
பஸ் ஏத்தி அனுப்பி
வெச்சேன்
பாவி மக உம் பெயரை
மனசுக்குள்ள செதுக்கி
வெச்சேன்
எல்லாமே மாறிப் போச்சு
என்னனென்னவோ
ஆகிப்போச்சு
எம் மகளும் உம் மகனும்
ஒண்ணா
விளையாடுதுங்க
நாளைக்கு அதும்
பொழப்பு
நம்மப் போல ஆகணுமா?
நாங் கண்ட ஒரு கனவு
நாசமா போகணுமா?
- எடிசன்
ஜெய பாஸ்கரன் கவிதைகள்
துப்பாக்கித் தோட்டா
துளைத்த நிலையிலும்
தான் சொல்லவேண்டிய
அனைத்தையும்
தெளிவாகச் சொல்லிவிட்டு
உங்கள் கதாபாத்திரம்
சாகும்போது,
கூடவே சாகிறது
சினிமா!
திரையிட்ட
பதின்மூன்றாயிரம்
அடியைவிட
நன்றாக இருக்குமோ
என எண்ணத்
தோன்றுகிறது |
எடுத்து எடுத்து நீங்கள்
வெட்டி வீசிய
நாற்பதாயிரம் அடி!
நீச்சல்குளத்தில்
நீச்சல் உடையில் நீராடி,
அதே உடையில்
நடுச்சாலையில் நடனமாடி,
பூங்காக்களில்
படுத்துருண்டபோதெல்லாம்
வராத வெட்கம்,
எங்கிருந்தோ வந்துவிடுகிறதே
உங்கள் கதாநாயகி
மணமகளாக மாறும்போது!
அயல்நாடுகளில்
நீங்கள்
ஆடிப் பாடும்போதெல்லாம்
அசையாமல் நின்றுபார்த்து,
அதிர்ச்சியுறுகிறார்கள்
அந்நாட்டு மக்கள்!
தான் காதலிக்க ஒரு பெண்
தன்னைக் காதலிக்க ஒருபெண்
பாசமாகத் தோளில் சுமக்க
ஒரு தங்கை
எனும் வகையில்,
குறைந்தபட்சம்
மூன்று பெண்களாவது
தேவைப்படுகிறார்கள் |
உங்களின் ஒரு
கதாநாயகனுக்கு!
வயது
ஒரு பிரச்னையே
இல்லை |
உங்களின்
கதாநாயகர்களுக்கு...
அது மட்டுமே
பிரச்னை
கதாநாயகிகளுக்கு!
திருட்டு
வி.சி.டி|க்காரர்கள்மீது
எனக்குக் கோபம்தான்...
எதைத் திருடுவது
என்கிற
விவஸ்தையில்லாதவர்கள்!
சொல்ல நினைத்த நியாயத்தை
நாலுவரி எழுதி, மேலே நகரவிட்டு,
அதைப் படிக்கவும் செய்தீர்களே...
அப்போதுதான்
மீண்டும் உறுதி செய்துகொண்டேன் |
அந்த இரண்டரை மணிநேரப் படத்தில்
நீங்கள்
எதையுமே சொல்லவில்லை என்பதை!
குழந்தைகள்
வேதனையும் வாழ்க்கையின்
ஒரு பகுதிதான் என்று
குழந்தைகளுக்குக் கற்பிக்காதீர்கள்,
அவர்களாவது ஆனந்தமான மனிதர்களாக
வளரும் வாய்ப்பை ஏன் பறிக்கிறீர்கள்?
Labels:
கவிதை
Subscribe to:
Posts (Atom)